அறிக்கையை படித்தால் அமித்ஷாவே சிரிப்பார் நாக்பூரின் ஏஜென்டாக செயல்படும் ஆளுநர்: அமைச்சர் கே.என்.நேரு பதிலடி
சென்னை: திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் ரசாயனப் போதைப்பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.
பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது என கிண்டி கமலாலயத்தில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தென்னை மரத்தில் தேள் கொட்டியதற்குப் பனை மரத்தில் நெறிக் கட்டும் என்ற பழமொழியைப் போல ‘தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டிற்கும் ஆளுநர் எதுவும் செய்யவில்லை’ எனச் சொல்லி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கையால் பட்டம் பெற மறுத்து அவமானத்தை சந்தித்த ஆளுநர் ரவிக்கு 24 மணி நேரம் கழித்து நெறி கட்டியிருப்பதைத்தான் அவருடைய அறிக்கை வெளிக்காட்டுகிறது.
இன்னொரு பக்கம் சுதந்திர தினத்திற்காக தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்ததை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்திருக்கின்றன. இப்படி விரக்தியில் வெம்பி அறிக்கை விட்டிருக்கிறார் ஆளுநர். அதில் சொல்லப்பட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு ஏற்கனவே ஆதாரத்தோடு பதில் அளிக்கப்பட்டுவிட்டது.
நாட்டின் சுதந்திர தினத்திற்கு விடுத்துள்ள செய்தியில் கூட நாகரிகம் இல்லாமல் ஆதாரமில்லாமல், மனம் போன போக்கில் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார். திராவிட மாடல் மீது வெளிப்படையாக வெறுப்பைக் கக்கும் நாக்பூரின் ஏஜென்டாகச் செயல்பட்டு வருகின்றார். ராஜ்பவனை ஆளுநர் ரவி அரசியல் பவனாக மாற்றி, கரை வேட்டிக் கட்டிய அரசியல்வாதி போலச் செயல்படுகிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.