பெருங்குளம் குளத்தில் பழுதான பெரியமடை ஷட்டர் சீரமைப்பு
*விவசாயிகள் மகிழ்ச்சி
ஏரல் : பெருங்குளம் குளத்தில் பெரியமடை ஷட்டர் பழுதாகி உள்ளதால் குளத்தில் இருந்து தண்ணீர் வீணாகி வந்ததை தினகரன் செய்தி எதிரொலியாக அதிகாரிகள் ஷட்டரை சீரமைத்தனர்.
ஏரல் அருகேயுள்ள பெருங்குளம் 680 ஏக்கர் பரப்பளவு உடையது.
இந்த குளத்திற்கு மருதூர் அணையில் இருந்து தண்ணீர் தனிக்கால்வாய் மூலம் சிவகளை மேலகுளம், கீழக்குளம் வழியாக வருகிறது. மேலும் மழைக்காலத்தில் காட்டாற்று தண்ணீரும் வந்து சேரும். பெருங்குளம் குளத்தில் உள்ள 7 பாசன மடை மூலம் மாங்கொட்டாபுரம், பெருங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை, நெல் விவசாயம் நடந்து வருகிறது.
இந்நிலையில் பெருங்குளம் பாசன மடை 4ல் (பெரியமடை) ஷட்டர் பழுதாகி இருந்ததால் குளத்தில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வந்தது.
ஏற்கனவே மழை பெய்து வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை தூர்ந்து போய் உள்ள வடிகால் வாய்க்கால் மூலம் விவசாயிகள் வடியவைத்திட போராடி வரும் நிலையில் குளத்தில் இருந்து வெளியேறி வரும் தண்ணீரும் அதிகளவு வயல்களில் தேங்கியிருந்தது. இதுகுறித்து தினகரனில் கடந்த 18ம்தேதி பெருங்குளம் குளத்தில் பழுதான இந்த பெரியமடை ஷட்டரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் சீரமைத்திட வேண்டும் என செய்தி வெளியிட்டு இருந்தது.
இதையடுத்து நேற்று காலை நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சிவராஜன், உதவி பொறியாளர் அஜ்மீர்கான், பாசன உதவியாளர்கள் சின்னத்துரை மற்றும் ராஜ்குமார் உட்பட அதிகாரிகள் பழுதான ஷட்டரை அகற்றி புதிய ஷட்டரை பொருத்தினர். இதனால் பெரிய மடையில் வீணாகி வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெருங்குளம் குளம் விவசாய சங்கத் தலைவர் சுடலை கூறுகையில் பெருங்குளம் குளத்தில் உள்ள பெரியமடையில் (பாசன மடை-4) உள்ள ஷட்டர் பழுது சீரமைக்கப்படாமல் இருந்ததால் குளத்திற்கு வரும் தண்ணீர் இவ்வழியாக வெளியேறி வீணாகி வந்தது.
இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியானதும் நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் வந்து பழுதான ஷட்டரை அகற்றி புதிய ஷட்டரை பொருத்தி தண்ணீர் வீணாவதை நிறுத்தியுள்ளனர். பெரிய மடையில் பழுதான ஷட்டரை மாற்றுவதற்கு காரணமாக செய்தியினை வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், ஷட்டரை சீரமைத்து தந்த நீர்வளத்துறை அதிகாரிகளுக்கும் விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.