சிறிய புல் மைதானத்தில் சீரமைப்பு பணி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள சிறிய புல் மைதானத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். குறிப்பாக, கோடை விடுமுறையின்போது, அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால், கோடை விடுமுறையான ஏப்ரல் மற்றும் ேம மாதங்ளில் பூங்கா தயார் செய்யப்பட்டது. புல் மைதானங்கள் பச்சை பசேல் என காட்சி அளித்தது.
ஊட்டியில் நடந்த மலர்கள் காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். கடந்த மே மாதம் 15ம் தேதி மலர் கண்காட்சி துவங்கியபோது ஊட்டியில் மழையும் துவங்கியது. இந்த மழை சுமார் 10 நாட்களுக்கு மேல் நீடித்தது. இதனால் பூங்கா சேறும், சகதியுமாக மாறியது. தற்போது மழை ஓய்ந்த நிலையில் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் சீரமைக்கும் பணிகளை தோட்டக்கலை துறையினர் துவக்கி உள்ளனர். இதனால், பராமரிப்பு பணிக்காக தற்போது சிறிய புல் மைதானம் மூடப்பட்டுள்ளது. புல் மைதானத்தில் வளர்ந்துள்ள குப்பைகளை அகற்றி, சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சில இடங்களில் புதிதாக பொருட்கள் பதிக்கப்பட்டு அவைகளை பராமரிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இதனால், சிறிய புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரிய புல் மைதானத்தை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.