மத வெறுப்பை தூண்டும் வகையில் எக்ஸ்தள பதிவு ஆளுநரை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: எஸ்டிபிஐ தலைவர் வலியுறுத்தல்
சென்னை: மதவெறுப்பை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஆளுநரை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது எக்ஸ் தளத்தில் இந்திய பிரிவினை குறித்து வெளியிட்ட பதிவு, மதவெறுப்பை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்து, உயர் பொறுப்பில் இருக்கும் ஆளுநர், மதங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் பதிவிடுவது ஏற்க முடியாத செயலாகும்.
குறிப்பாக, தமிழ்நாட்டு மக்களிடையே மதவெறுப்பை தூண்டும் இத்தகைய பதிவு, ஆளுநரின் பதவிக்கு முற்றிலும் பொருந்தாது. ஆளுநரின் பதிவு ஒரு தரப்பை மட்டும் குற்றம்சாட்டி, முஸ்லிம்களை வன்முறையாளர்களாக சித்தரித்து, வெறுப்பை தூண்டுவதாக உள்ளது. இது வரலாற்றைத் திரித்து, கற்பனை கதைகளை கலந்து, உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட செயலாகும்.
இன்றைய சூழலில், தேசத்தின் நலனுக்கு, மக்களின் ஒற்றுமைக்கு, சாதி-மத வெறுப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரத்தில், ஆளுநர் போன்ற உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மதவெறுப்பு அரசியலை முன்னெடுப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இது ஆளுநர் என்ற பதவிக்கு சற்றும் பொருந்தாத செயலாகும். எனவே, வரலாறு என்ற பெயரில் வெறுப்பைத் தூண்டும் தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் இருந்து, இதுபோன்ற பிளவை தூண்டும் சக்திகளுக்கு எதிராக விழிப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.