அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் விளக்கம்
புதுடெல்லி: நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய காஜூராஹோ கோயில் வளாகத்தின் ஒரு பகுதியான ஜவாரி கோயிலில் ஏழு அடி உயர விஷ்ணு சிலையை புனரமைத்து மீண்டும் நிறுவ வழிகாட்டுதல்களைக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த 16ம் தேதி, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் வழக்கு வந்தது.
அப்போது இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இது ,முற்றிலும் விளம்பரத்துக்கான வழக்கு. தெய்வத்திடம் சென்று ஏதாவது செய்ய சொல்லுங்கள். நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால் நீங்கள் பிரார்த்தனை, தியானம் செய்யுங்கள் என்று மனுதாரர் ராகேஷ் தலாலிடம் கூறினார். காஜூராஹோ விஷ்ணு கோயில் சீரமைப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள், விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், தலைமை நீதிபதி கவாய் நேற்று கூறுகையில்,‘‘ நான் சொன்ன கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வேறுமாதிரி சித்தரிக்கப்படுவதாக ஒருவர் என்னிடம் சொன்னார். நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன். கோயில் மேற்பார்வை தொல்பொருள் ஆய்வுதுறையின் கீழ் வருவதால், இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் அந்த சூழலில் சொன்னோம்.காஜூராஹோவில் மிகப்பெரிய லிங்கங்களில் ஒன்றான சிவன் கோயிலும் இருப்பதாக நான் கூறியிருந்தேன்,’’ என்றார்.