இந்தியாவுடனான உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ
வாஷிங்டன்: இந்தியாவுடனான உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். வர்த்தகம் மற்றும் ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி உள்ளிட்ட விஷயங்களில் இந்தியா அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், குடியுரிமை பெறாத வெளிநாட்டவர், அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக எச்1 பி விசாவுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சம் ஆக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார். இது அமெரிக்கா செல்ல இருக்கும் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றார். ஐ.நா.வில் வருகிற 27-ம் தேதி அவர் உரையாற்றுகிறார். இதற்கிடையே பல்வேறு நாட்டு தலைவர்களை அவர் சந்தித்து பேச உள்ளார். அந்தவகையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோவை நேற்று சந்தித்து பேசினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். நியூயார்க்கில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, பாராமெடிக்கல், மற்றும் முக்கியமான கனிமங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு செயலர் ருபியோ, தனது சமூக வலைதள பதிவில் கூறியதாவது:-
ஐநா பொதுச்சபை கூட்டத்திற்கு நடுவே வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினேன். வர்த்தகம், எரிசக்தி உள்பட எங்கள் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம் என்று பதிவிட்டுள்ளார்.