டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கியது ஒன்றிய அரசு
டெல்லி: டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு ஒன்றிய அரசு Z பிரிவு பாதுகாப்பு வழங்கியது. டெல்லி முதல்வர் ரேகா குப்தா தனது அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அதற்கான தீர்வுகளை வழங்கி வருகிறார். இதன் காரணமாக, தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சந்திக்கும் நிகழ்ச்சியான ‘ஜான் சன்வாய்’ என்று சொல்லப்படும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி, இந்த முகாம் அலுவலகத்தில் நடந்து வருகிறது. வழக்கம் போல் நேற்று காலை நடைபெற்ற ’ஜன் சன்வாய்’ நிகழ்ச்சியில் முதல்வர் ரேகா குப்தா பங்கேற்றார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டுக் கொண்டு விண்ணப்பங்களை வாங்கினார்.
அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் நபர் ஒருவர் ரேகா குப்தாவை தாக்கியதால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து தாக்குதல் நடத்திய ராஜேஷ் கிம்ஜி சகாரியா என்ற அந்த நபர் கைது செய்த போலீசார் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்படுத்தினர். 5 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவம் குறித்து ராஜேஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு ஒன்றிய அரசு Z பிரிவு பாதுகாப்பு வழங்கியது. முதல்வர் ரேகா குப்தா மீது ராஜேஷ் என்பவர் தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரேகா குப்தா இல்லத்திற்கு சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.