நாட்டிலேயே குளிர்சாதன பெட்டி பயன்பாட்டில் சென்னை முதலிடம்..!!
டெல்லி: நாட்டிலேயே குளிர்சாதன பெட்டி பயன்பாட்டில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல இந்திய நகரங்களில், குளிர்சாதனப் பெட்டிகளின் (AC) பயன்பாடு அதிகரித்துவருவதாகவும், இதனால் குளிர்பதன உமிழ்வுகள் குறித்து கவலைகள் எழுவதாகவும் ஒரு ஆய்வு வெளிவந்துள்ளது. இந்த ஆய்வில், வீட்டு உபயோகங்களின் அடிப்படையில் ஏசி பயன்பாட்டில் சென்னை முதலிடத்தில் இருப்பதை காட்டுகிறது. நாட்டின் 7 முக்கிய நகரங்களில் ஏசி பயன்பாட்டில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.
ஏசி பயன்பாட்டில் மாற்றம் கொண்டுவரும் வகையில், ஒன்றிய அரசு ஏசி வெப்பநிலையை 20 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் தற்போது 16 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை மாற்றும் வசதி உள்ள ஏசி-க்களில், குறைந்தபட்ச வெப்பநிலையை 20 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மாற்ற உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது . சென்னையில் உள்ள குடும்பங்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 4.4 மணிநேரம் குளிர்சாதன வசதி பயன்படுத்து கின்றனர். 23% பேர் 2க்கும் மேற்பட்ட குளிர்சாதன பெட்டிகளை வைத்துள்ளனர். இது தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகமாகும்.