செங்குன்றம் அருகே சாலையில் திரியும் மாடுகள்: வாகன ஓட்டிகள் அவதி
புழல்: செங்குன்றம் அருகே உள்ள கிராமங்களில் மாடுகள் சாலையில் குறுக்கும் நெருக்கமாக செல்வதால் வாகன ஒட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். செங்குன்றம் அடுத்த வடகரை, கிரான்ட் லைன், வடபெரும்பாக்கம், விளாங்காடுப்பாக்கம், கண்ணம்பாளையம், தர்காஸ், அழிஞ்சி வாக்கம், சென்றம்பாக்கம், புள்ளிலைன், தீர்த்தங்கரைபட்டு. கும்மனூர் மற்றும் செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பல்வேறு சாலை மற்றும் தெருக்களில் மாடுகள் சுற்றி வருவதால் சாலை மற்றும் தெருக்கள் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும்போது மின்விளக்கு வசதி இல்லாததினால் மாடுகள் மீது மோதி விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்து வருகின்றனர். ஒருசில நேரங்களில் உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது.
எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட கால்நடை பராமரிப்பு துறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளில் குறுக்கும் நெருக்கமாக சுற்றி வரும் மாடுகளை சிறைப்பிடித்து மாட்டு தொழுவத்தில் அடைத்து மாட்டு உரிமையாளர்களிடம் அபராத தொகை வசூலிக்கவும் இனிவரும் காலங்களில் சாலைகளில் மாடுகளை விடக்கூடாது என மாட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.