செங்கோட்டையில் நடந்த மத விழாவில் சந்நியாசி வேடத்தில் புகுந்து ரூ.1.5 கோடி திருட்டு: டெல்லியில் பரபரப்பு
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் ஜெயின் மத நிகழ்ச்சியில், சந்நியாசி வேடத்தில் வந்த நபர் சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான பொருட்களைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி செங்கோட்டை வளாகத்தில் உள்ள பூங்காவில் ‘தஸ்லக்ஷண் மகாபர்வ’ என்ற 10 நாள் ஜெயின் மத நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அப்போது ஜெயின் சந்நியாசி வேடத்தில் வந்த சந்தேக நபர், விலை உயர்ந்த பொருட்கள் இருந்ததாகக் கருதப்படும் பையுடன் தப்பிச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.
திருட்டு நடப்பதற்கு முந்தைய நாளான செவ்வாய்க்கிழமை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இவ்விவகாரம் தொடர்பாக போலீசில் நிர்வாகத்தினர் புகார் அளித்தனர். போலீசாரின் பலத்த பாதுகாப்பை மீறி சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசம் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. தொழிலதிபர் சுதிர் ஜெயினுக்குச் சொந்தமான இந்த பொருட்களை, ஜெயின் முனிவர் வேடத்தில் வந்த மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். திருடப்பட்ட பொருட்களில் சுமார் 760 கிராம் எடையுள்ள தங்க ஜாரி, தங்கத் தேங்காய் மற்றும் வைரங்கள், மரகதங்கள், மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட 115 கிராம் எடையுள்ள சிறிய தங்க ஜாரி ஆகியவையும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதிர் ஜெயின் தினமும் இந்த பொருட்களை பூஜைகளுக்காக கொண்டு வருவது வழக்கம். சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் காவல்துறை உறுதியளித்துள்ளது. இதற்கிடையே, இந்த திருட்டில் ஈடுபட்ட நபர் இதற்கு முன்பும் மூன்று கோயில்களில் இதே போன்ற திருட்டு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக சுதிர் ஜெயினின் உறவினரான புனித் ஜெயின் குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஜெயின் மத நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 9ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.