டெல்லி கார் வெடிப்பு: செங்கோட்டை மெட்ரோ நிலையம் நாளையும் செயல்படாது என அறிவிப்பு
டெல்லி: டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் நாளையும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியின் மிகவும் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியும், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமுமான செங்கோட்டை அருகே நேற்று மாலை 6.52 மணியளவில் நடந்த சக்திவாய்ந்த கார் குண்டு வெடிப்பில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், பாகிஸ்தானை மையமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என வலுவாக சந்தேகிக்கப்படுகிறது.
டெல்லி கார் வெடிப்பு வழக்கை, தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. இந்த சம்பவத்தில், பயங்கரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், வழக்கு என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. செங்கோட்டை மெட்ரோ நிலையம் நாளையும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பாதுகாப்பு காரணங்களுக்காக தில்லி லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் நாளையும் செயல்படாது. ஆனால், மற்ற மெட்ரோ நிலையங்கள் வழக்கம்போல செயல்படும். மேற்கொண்டு தகவல்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.