இதுவரை 170 மில்லியன் டாலர் உதவி; பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: ஐ.நா-வில் இந்தியா வலியுறுத்தல்
நியூயார்க்: மத்திய கிழக்கு பகுதியில் நிரந்தர அமைதி ஏற்பட, இறையாண்மையுள்ள சுதந்திர பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் கொள்கையே ஒரே தீர்வு என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் மத்திய கிழக்கு நிலவரம், குறிப்பாக பாலஸ்தீன விவகாரம் குறித்த திறந்த விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், காசா அமைதி ஒப்பந்தத்தை வரவேற்பதாகக் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், ‘பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலமாகவுமே அமைதியை எட்ட முடியும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அமெரிக்காவின் முக்கிய முயற்சி அமைதிக்கான உத்வேகத்தை உருவாக்கியுள்ளது.
பயங்கரவாதத்தை இந்தியா கண்டிக்கிறது; அப்பாவி மக்களின் அழிவு, விரக்தி மற்றும் துன்பம் முடிவுக்கு வர வேண்டும்; பிணைக்கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்; காசாவுக்குள் மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்ல வேண்டும்; போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள், இஸ்ரேலுடன் அருகருகே அமைதியாகவும் பாதுகாப்புடனும் வாழும் இறையாண்மை கொண்ட, சுதந்திரமான, பாலஸ்தீனத்தை உருவாக வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா இதுவரை 170 மில்லியன் டாலருக்கும் அதிகமாக உதவி வழங்கியுள்ளது.
இதில் 135 மெட்ரிக் டன் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் அடங்கும். அதேபோல், லெபனான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளிலும் அமைதி திரும்புவதை இந்தியா விரும்புகிறது. சிரியாவில் அந்நாட்டு மக்களின் தலைமையிலான அரசியல் மாற்றத்திற்கு இந்தியா ஆதரவளிக்கிறது’ என்றார்.