செயல்முறை ஆணை பெற்றவர்கள் விரைந்து மினி பேருந்து சேவையை தொடங்கிட வேண்டும்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் செயல்முறை ஆணை பெற்றவர்கள் விரைந்து மினி பேருந்து சேவையை தொடங்கிட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மினி பேருந்து திட்டத்தின் கீழ் செயல்முறை ஆணை பெற்றவர்கள் மினிபேருந்து சேவையை விரைந்து தொடங்குவது தொடர்பான ஆலோனை கூட்டம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு அரசின் விரிவான மினி பேருந்து திட்டம் 2024-னை செயல்படுத்திடும் விதமாக விழுப்புரம் மாவட்டத்தில் 109 வழித்தடங்களுக்கான அரசிதழ் வெளியிடப்பட்டு 109 வழித்தடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு 109 நபர்களுக்கு செயல்முறை ஆணை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த மாதம் 16ம் தேதி மினி பேருந்து திட்டம் தொடங்கப்பட்டு அன்று விழுப்புரம் மாவட்டத்தில் 25 மினி பேருந்து வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு மினி பேருந்து வாகன இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.
அதன்படி தற்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் செயல்முறை ஆணை பெற்றவர்கள் மினி பேருந்து சேவையை விரைந்து தொடங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் செயல்முறை ஆணை பெற்று மினி பேருந்து சேவை தொடங்காத நபர்களுக்கு உடனடியாக மினி பேருந்து வாகனங்கள் வாங்கி செயல்முறை ஆணை வழங்கப்பட்ட மினி பேருந்து வழித்தடத்தில் வாகனங்கள் இயக்கிட அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.