ரியல் எஸ்டேட் அதிபர் ரூ.5 கோடி கேட்டு கடத்தல்
ஓசூர்: சூளகிரி அருகே, ரூ.5 கோடி கேட்டு ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய நான்கு பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியைச் சேர்ந்தவர் சீதாராமன்(34). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம், இவரை பெண் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு வீட்டுமனை வேண்டுமென கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் தனது காரில் சூளகிரியிலிருந்து பத்தளப்பள்ளிக்கு புறப்பட்டார். அப்போது அவரை மடக்கிய ஒரு கும்பல், அந்த காரிலேயே கடத்திச் சென்று, அவரிடம் ரூ.5 கோடி பணம் கேட்டு மிரட்டியது. மேலும், சீதாராமனிடம் செல்போனை கொடுத்து தெரிந்த நபர்களிடம் பணம் பெற்றுத் தருமாறு கட்டாயப்படுத்தினர்.
சீதாராமனும் தனக்கு தெரிந்தவர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளார். அப்போது, கடத்தல் கும்பலுக்கு தெரியாமல், தனது லொகேஷனை ஷேர் செய்துள்ளார். இதன் மூலம், அவர் கடத்தப்பட்டதை அறிந்த உறவினர்கள், ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர் அனுப்பிய லொகேஷன் மூலம், அவர்கள் இருப்பிடத்தை கண்டறிந்து கடத்தல் கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசார் வருவதை கண்ட கும்பல் காரில் தப்ப முயன்றது. அவர்களை அட்கோ மற்றும் டவுன் போலீசார் நாலாபக்கமும் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். தொடர்ந்து சிக்கிய 4 பேரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.