மூலப்பொருட்கள் விலை, போக்குவரத்து செலவு அதிகரிப்பு எதிரொலி; சென்னையில் டீ, காபி விலை இன்று முதல் உயர்வு
சென்னை: தேயிலை, காபி பவுடர், பால் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரிப்பால் சென்னையில் இன்று முதல் டீ, காபி விலையை உயர்த்துவதாக டீக்கடைக்காரர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதே நேரத்தில் பஜ்ஜி, போண்டா, சமோசா விலையும் ரூ.3 அதிகரிக்கிறது.
மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் டீ, காபியின் பயன்பாடு அதிகமாகி கொண்டே போகிறது. டீ, காபி குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கம்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் முதல், தீவிர உடல் உழைப்பில் ஈடுபடுவர்கள் வரை இடைவேளை நேரத்தில் கண்டிப்பாக டீ, காபியை அருந்துவதை பார்க்க முடியும். பலருக்கு டீ அல்லது காபியையோ குடிக்காவிட்டால் அன்றைய தினமே எதையோ மிஸ் செய்வது போல உணர்வார்கள். இளைஞர்கள் பலரும் தங்களுக்கு காலை உணவே, இந்த டீ தான் என்று சொல்லும் அளவுக்கு பட்டினி கிடந்தால் கூட மறக்காமல் டீ குடிப்பதை பார்க்க முடிகிறது. இப்படி உணவு கலசாரத்தில் தவிர்க்க முடியாத இடத்தை இந்த சூடான பானங்கள் பெற்று விட்டன.
இப்போது டீ, காபியின் விலை உயர்ந்துவிட்டது. சென்னையில் டீ, காபி விலை 2022ல் உயர்த்தப்பட்டது. ரூ.10க்கு விற்கப்பட்ட டீ ரூ.12 ஆனது. காபி ரூ.12லிருந்து ரூ.15 ஆகவ உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான விலைப் பட்டியலும் ஒவ்வொரு டீ கடைகளிலும் வாடிக்கையாளர்கள் பார்க்கும் வகையில் நேற்று முதல் ஒட்டப்பட்டது.
இன்று முதல் ஒரு கிளாஸ் டீ ரூ.12லிருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15லிருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல பால் ரூ.15, லெமன் டீ ரூ.15 ஆகவும், ஸ்பெஷல் டீ, ராகி மால்ட், சுக்கு காபி போன்றவை ரூ.15லிருந்து ரூ.20 ஆகவும் உயர்ந்துள்ளது. பூஸ்ட், ஹார்லிக்ஸ் போன்றவை ரூ.20லிருந்து ரூ.25 ஆகவும் உயர்ந்துள்ளது. இதே போல கப் டீ, கப் பால் பார்சல் ரூ.45 ஆகவும், கப் காபி, ஸ்பெஷல் டீ, ராகி மால்ட், சுக்கு காபி பார்சல் ரூ.60 ஆகவும், பூஸ்ட் ரூ.70, ஹார்லிக்ஸ் பார்சல் ரூ.70 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதே போல பஜ்ஜி (வாழைக்காய், மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு), சமோசா, போண்டா போன்றவை ஒரு பீஸ் ரூ.12க்கு விற்கப்பட்டது. இது இன்று முதல் ரூ.3 அதிகரித்து ரூ.15க்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டீக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகையில், ‘‘பால் விலை, டீ-காபி தூள், சர்க்கரை உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு. போக்குவரத்து செலவு அதிகரிப்பால் வேறு வழியில்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கூகுள் பே, போன் பே ஆகியவற்றில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் போது அதற்கு ஜி.எஸ்.டி.அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இது போன்ற காரணங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தரமான டீ மற்றும் காபி வழங்கும் வகையில் தான் அதன் விலை உயர்த்தப்பட்டுள்ளது’’ என்றனர்.
ஏற்கனவே காய்கறி முதல் மளிகை சாமான்கள் வரை அனைத்து பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. போதாத வேளைக்கு அவ்வப்போது சமையல் சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் டீ, காபி விலை உயர்வு என்பது டீ, காபி பிரியர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.