ரேஷன் பொருள் வாங்க ஊர் விட்டு ஊர் சென்றபோது சோகம்: டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் பலி: 10 பேர் படுகாயம்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி - முதல்வர் அறிவிப்பு;
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம், கூவர் கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த 15 நபர்கள் நேற்று பிற்பகல் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு டிராக்டரில்சென்று கொண்டிருந்த போது கண்மாய்க்குள் கவிழ்ந்து பொன்னம்மாள் (68), ராக்கி (62) மற்றும் முனியம்மாள் (55) ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.