ஒரு பெண், குழந்தையுடன் தங்கியிருந்த போது ‘ராப்’ பாடகர் ஓட்டலில் மர்ம மரணம்:சுட்டுக் கொலையா, தற்கொலையா என குழப்பம்
புளோரிடா: அமெரிக்காவில் ஓட்டல் அறையில் தங்கியிருந்த இளம் ராப் பாடகர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் இசை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த கார்லிட்டோ மில்போர்ட் ஜூனியர் (26) என்ற பிரபல ராப் பாடகர் கடந்த 10 நாட்களாக போகா ரேட்டன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஒரு பெண் மற்றும் குழந்தையுடன் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது அறையில் மருத்துவ அவசர உதவி தேவைப்படுவதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ஸ்ட்ரெச்சரில் வைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் குறித்து மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, பாடகர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குடும்பத்தினர் கூறுகையில், ‘இது தற்கொலை முடிவாக இருக்க வாய்ப்பில்லை; அவரது மரணத்தில் சதி செயல் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம், முறையான விசாரணை தேவை’ என்று வலியுறுத்தியுள்ளனர். ஹிப்-ஹாப் மற்றும் ராக் இசையில் தனித்துவம் பெற்ற இவர், புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் பணியாற்றியவர் என்பதும், கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படப் பாடல்களில் பங்காற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.