பலாத்கார புகார் கொடுத்ததால் மாடல் அழகிக்கு ரூ.190 கோடி இழப்பீடு தந்த ஜாம்பவான்: வேறு வழியின்றி சிக்கிக் கொண்டதால் அதிர்ச்சி
நியூயார்க்: அமெரிக்காவின் என்.எஃப்.எல். ஜாம்பவான் ஷேனன் ஷார்ப், பாலியல் வன்கொடுமை வழக்கில் 23 மில்லியன் டாலர் கொடுத்து சமரசம் செய்துகொண்டதை அடுத்து, தனது தொலைக்காட்சிப் பணியை இழந்துள்ளார். அமெரிக்காவின் பிரபல கால்பந்து வீரரும், என்.எஃப்.எல். ஜாம்பவானுமான ஷேனன் ஷார்ப் மீது, கேப்ரியல்லா ஜுனிகா என்ற 20 வயது ‘ஓன்லிஃபேன்ஸ்’ மாடல் அழகி கடந்த ஏப்ரல் மாதம் 50 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு பாலியல் வன்கொடுமை வழக்குத் தொடர்ந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை ஷேனன் ஷார்ப் திட்டவட்டமாக மறுத்ததோடு, தங்களுக்கு இடையேயான உறவு சம்மதத்தின் அடிப்படையிலானது என்றும் வாதிட்டார். இருப்பினும், இறுதியில் அவர் 23 மில்லியன் டாலர் (ரூ.190 கோடி) கொடுத்து இந்த வழக்கை சமரசமாக முடித்துக்கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் பணியாற்றி வந்த ஈ.எஸ்.பி.என். தொலைக்காட்சி நிறுவனம் அவரைப் பணியில் இருந்து நீக்கியது.
இந்த வழக்கு விசாரணையின்போது, ஷேனன் ஷார்ப் பகிரங்க சவாலை விடுத்திருந்தார். தன்னிடம் உள்ள முழு ஆபாச வீடியோவையும் வெளியிடுமாறு புகாரளித்த பெண்ணின் சட்டக் குழுவிற்கு அவர் சவால் விடுத்தார். ‘என்னை குற்றவாளியாகக் சித்தரிப்பதற்காக, 30 வினாடிகள் கொண்ட வீடியோ பகுதியை மட்டும் திருத்தி வெளியிட்டுள்ளனர்’ என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆனால், புகாரளித்த பெண்ணின் வழக்கறிஞர் டோனி பஸ்பீ, வீடியோவின் இருப்பை உறுதி செய்தாலும், அது ஒரு ஆதாரமாக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், பொதுவெளியில் வெளியிடப்படாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த வழக்கு மற்றும் சமரசத் தீர்வு ஆகியவை ஷேனன் ஷார்ப்பின் நற்பெயருக்குக் கணிசமான களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மத்தியிலும் அவருக்குக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தச் சர்ச்சைகளுக்கு மத்தியிலும், அவர் தனது பிரபலமான ‘கிளப் ஷே ஷே’ மற்றும் ‘நைட்கேப்’ பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.