கூட்டு பலாத்கார வழக்கு கோவை மத்திய சிறையில் அடையாள அணிவகுப்பு: கைதான 3 பேரையும் உறுதி செய்த மாணவி
கோவை: கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த 2ம் தேதி இரவு காரில் அமர்ந்து காதலனுடன் பேசி கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவியை 3 வாலிபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சகோதரர்கள் சதீஷ் (எ) கருப்பசாமி (30), காளி (எ) காளீஸ்வரன் (21), இவர்களது உறவினர் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா (எ) தவசி (20) ஆகியோர் கடந்த 3ம் தேதி இரவு கோவை அருகே துடியலூர் பகுதியில் பதுங்கி இருந்த போது போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கோவை மத்திய சிறையில் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1 நீதிபதி தமிழ் இனியன் முன்னிலையில் ஒரு வழி கண்ணாடி வழியாக விதிமுறைகளின்படி அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது கூட்டு பாலியல் வழக்கில் கைதான 3 பேருடன் மேலும் சிலரை வரிசையில் நிற்க வைத்து அடையாளம் காட்டும்படி பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது காதலனிடம் நீதிபதி கூறினார்.
முதலில் பாதிக்கப்பட்ட பெண், பின்னர் அவரது காதலன் பார்த்து 3 வாலிபர்களையும் அடையாளம் காட்டி உறுதி செய்தனர். தொடர்ந்து பெண் மற்றும் அவரது காதலனிடம் நீதிபதி தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். விசாரணை ஆவணங்களை நீதிபதி தமிழ் இனியன் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.