போலீஸ் எஸ்ஐ-யால் பாலியல் பலாத்காரம்: போலி சான்றிதழ் தர மறுத்த பெண் டாக்டர் தற்கொலை; மீட்கப்பட்ட 4 பக்க கடிதத்தில் எம்பி மீது பரபரப்பு புகார்
சதாரா: போலீசார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கொடுத்த தொடர் அழுத்தம் மற்றும் பாலியல் வன்கொடுமை காரணமாக இளம் பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், சதாரா மாவட்டத்தில் உள்ள பல்தான் துணை மாவட்ட மருத்துவமனையில் இளம் பெண் மருத்துவர் ஒருவர் பணியாற்றி வந்தார். தனது முதுகலைப் படிப்பைத் தொடர இருந்த நிலையில், கிராமப்புற சேவைப் பணியை முடிப்பதற்கு இன்னும் ஒரு மாதமே இருந்த சூழலில், கடந்த 24ம் தேதி விடுதி அறை ஒன்றில் அவர் தற்கொலை செய்துகொண்டார். அவரது அறையில் இருந்து நான்கு பக்க தற்கொலை குறிப்புக் கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், காவல் உதவி ஆய்வாளர் கோபால் பட்னே என்பவர் கடந்த ஐந்து மாதங்களாக தன்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்து, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘காவல்துறை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு, அவர்களை பரிசோதனை செய்யாமலேயே தகுதிச் சான்றிதழ் வழங்குமாறு காவல் அதிகாரிகள், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது இரண்டு உதவியாளர்கள் ஆகியோர் தனக்குக் கடும் அழுத்தம் கொடுத்ததாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால், உதவி ஆய்வாளர் பட்னே தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்தார்’ என்று அந்த உருக்கமான கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து, மருத்துவரின் குடும்பத்தினர் கூறுகையில், ‘காவல்துறையினரின் துன்புறுத்தல் குறித்து கடந்த ஜூன் மாதமே துணை காவல் கண்காணிப்பாளரிடம் அவர் கடிதம் மூலம் புகார் அளித்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இந்த பகீர் சம்பவம் வெளிவந்ததையடுத்து, உதவி ஆய்வாளர் கோபால் பட்னே மற்றும் பிரசாந்த் பாங்கர் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பட்னே தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வடேட்டிவார் கூறுகையில், ‘மருத்துவரின் முந்தைய புகார்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ எனக் கேள்வி எழுப்பி, மாநில அரசு காவல்துறையைக் காப்பாற்ற முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து, முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தற்கொலை குறிப்பு கடிதத்தில், காவல் அதிகாரிகள், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது இரண்டு உதவியாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அவர்கள் யார் என்பது குறித்த சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.