ரங்கராஜ் விவகாரத்தில் ஜாய் கிரிசில்டாவை எதிர்த்து பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்கள் நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக, ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா பிரபல சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் டேக் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தின் சார்பில், கிரிசில்டாவின் சமூக வலைதள பதிவுகளால் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் செப்டம்பர் வரை 11 கோடியே 21 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தாகியுள்ளது. எனவே, சமூக வலைதள பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும். மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்த தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
கிரிசில்டா தரப்பில், சமூக வலைதள பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் பற்றியோ, நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கை குறித்தோ எதையும் பதிவிடவில்லை. 11 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் நிலையில், கேட்டரிங் ஆர்டர் புக்கிங், ரத்து, அட்வான்ஸ் என எந்த விபரங்களையும் தெரிவிக்கவில்லை. இதற்கும் ஜாய் கிரிசில்டாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.செந்தில் குமார், ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.