இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்: 700 விசைப்படகுகள் கரைநிறுத்தம்
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று தொடங்கினர். இதனால் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. பாக் ஜலசந்தி கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டிவந்து மீன்பிடிப்பதாக கூறி கைது செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மீனவர்களுக்கு கடும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், தனுஷ்கோடி கடல் எல்லையோரம் நேற்று முன்தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த நடவடிக்கை ராமேஸ்வரம் மீனவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் தலைவர் ஜேசுராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், இலங்கை வசம் உள்ள 49 மீனவர்களையும், 9 படகுகளையும் ஒன்றிய, மாநில அரசுகள் உடனே தலையிட்டு மீட்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் மீன்பிடி துறைமுகத்தில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையிழந்து, சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தையொட்டி தங்கச்சிமடத்தில் நாளை மறுநாள் (ஆக.13) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும், ஆக. 15ம் தேதி சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதப் போராட்டமும், 19ம் தேதி தங்கச்சிமடத்தில் ரயில் மறியலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டத்தால் மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.