ராமேஸ்வரம் விமான நிலையத்திற்காக, ராமநாதபுரம், கீழக்கரை தாலுகாக்களில், ஐந்து இடங்கள் தேர்வு : விரைவில் அதிகாரிகள் ஆய்வு
சென்னை : ராமேஸ்வரம் விமான நிலையத்திற்காக, ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை தாலுகாக்களில், ஐந்து இடங்களை தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் வழிபட, உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அம்மாவட்டத்தில் உள்ள பாம்பன் பாலம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் போன்றவை, முக்கிய சுற்றுலா தலங்களாக திகழ்கின்றன.பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ராமேஸ்வரம் வந்து சென்ற பின், அங்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு 500 - 700 ஏக்கர் நிலம் உள்ள 5 இடங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது.ராமநாதபுரம் தாலுகாவில் உள்ள பழங்குளம், தேவிப்பட்டினம், கும்பரம்; கீழக்கரை தாலுகாவில் உள்ள களரி, மாணிக்கனேரி ஆகிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இந்த இடங்களில் ஒன்றை தேர்வு செய்ய, இந்திய விமான நிலையங்களின் ஆணையம் வாயிலாக, விரைவில் சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.