ராமநத்தம் அருகே பரபரப்பு வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் திருட்டு
*மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
திட்டக்குடி : வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் மனைவி ராஜேஸ்வரி(32). ஜெகநாதன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ராஜேஸ்வரி வெங்கனூர் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவர்கள் வெங்கனூர் மேற்கு தெருவில் புதிதாக வீடு கட்டி வருகிறார்கள். நேற்றுமுன்தினம் இரவு ராஜேஸ்வரி புதிய வீட்டில் இருந்து சுமார் 20 பவுன் நகையை அவர் குடியிருந்து வரும் தகரசீட் வீட்டுக்கு கொண்டு சென்று, அங்குள்ள பெட்டியில் வைத்துவிட்டு மீண்டும் புதிய வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார்.
இதையடுத்து நேற்று காலை புதிய வீட்டில் இருந்து தகரசீட் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டினுள் பெட்டியில் வைத்திருந்த 20 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது இது குறித்து தகவலின் பேரில், ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இது குறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வீட்டில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்று திட்டக்குடி பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடந்து வருவதாகவும், இதனால் போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.