ராமநாதபுரம் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பெருவயல் ரெணபலி முருகன், குண்டுகரை முருகன் கோயில்களில் சஷ்டி விழாவை முன்னிட்டு அரோகர கோஷத்துடன் சூரசம்ஹாரமும், நேற்று திருக்கல்யாணம் நடந்தது. கந்தசஷ்டி விழா கடந்த அக்.22ம் தேதி துவங்கியது, 27ம் தேதி சூரசம்ஹாரம், நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதற்காக மாவட்டத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற முருகன் கோயில்களில் அக்.22ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் கோயிலான தேவிப்பட்டிணம் அருகே பெருவயல் சிவசுப்ரமணியர் என்ற ரெணபலி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தொடர்ந்து 5 நாட்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள், உள்பிரகார உலா நடந்தது.
ராமநாதபுரம் அருகே உள்ள குண்டுக்கரை முருகன் கோயிலிலும் சூரனை முருகன் வேல் கொண்டு சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் போது பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை முட்டியது. தொடர்ந்து அம்பு எய்தல், காய்கனி வீசுதல் நடந்தது. எய்த அம்பு மற்றும் காய்,கனிகளை பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.
தொடர்ந்து ரெணபலி முருகன் மற்றும் குண்டுகரை முருகன் கோயிலில் ராமநாதபுரம் சமஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் முன்னிலையில் நேற்று காலையில் திருக்கல்யாணம் நடந்தது. முதுகுளத்தூர் சுப்ரமணியர், வழிவிடு முருகன், சாயல்குடி வழிவிடுமுருகன், மேலக்கொடுமலூர் குமரன், நீராவி கரிசல்குளம் வள்ளி, தெய்வானை உடனுரை சுப்ரமணியர் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய வழிபாடு நடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மேற்கு கோபுர நுழைவாயில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய முருகப்பெருமானுக்கு தினசரி சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்றது. சஷ்டி விரதம் கடைபிடித்த முருக பக்தர்கள் காலையிலும், மாலையிலும் மேலவாசல் முருகனை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
நிறைவு நாளான நேற்று ராமநாதசுவாமி திருக்கோயில் மூலவர் சன்னதி முதல் பிரகாரம் நுழைவாயிலில் நந்தி மண்டபம் முன்பு வள்ளி தெய்வானையுடன் அமைந்துள்ள முருகர் சன்னதியில் இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதையெடுத்து முருகர், வள்ளி, தெய்வானை வெள்ளி கவச சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். உற்சவ சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதில் கோயில் உதவி ஆணையர் ரவீந்திரன், பேஷ்கார்கள் கமலநாதன், நாகராஜன், முனியசாமி, தபேதார் முத்துக்குமார் உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.