ராமஜெயம் கொலை வழக்கு சென்னை உள்ளிட்ட சிறை கைதிகளை விசாரிக்க முடிவு
திருச்சி: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் உடன் பிறந்த சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 மார்ச் 29ம் தேதி தனது வீட்டில் இருந்து அதிகாலையில் நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தமிழக போலீஸ் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
இதையடுத்து, ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரியாக இருந்த ஜெயக்குமார் மாற்றப்பட்டார். இதையடுத்து, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் தஞ்சாவூர் எஸ்பி ராஜாராம் ஆகியோரை உயர்நீதிமன்றம் விசாரணை அதிகாரிகளாக நியமித்தது. அதன்படி விசாரணை பல்வேறு கோணங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தலைமையில் 2 டிஎஸ்பிக்கள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் கடந்த 1ம் தேதி நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்று கொலை குற்றவாளி சுடலைமுத்து என்பவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். ராமஜெயத்தின் கொலை நடந்த சமயத்தில் தொழிற்பயிற்சிக்காக திருச்சி சிறைக்கு சுடலைமுத்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் தன்னுடன் இருந்த மற்றொரு கைதியுடன் ராமஜெயம் வழக்கு தொடர்பாக செல்போனில் பேசியதாக தெரிகிறது. ஆனால், அந்த செல்போனை அப்போது ஜெயிலராக இருந்தவர் பறிமுதல் செய்து உடைத்து விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, திருச்சி, மதுரை, கோவை, கடலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள மத்திய சிறைகளில் உள்ள முக்கிய கைதிகள் சிலரிடம் திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.