ராமஜெயம் கொலை வழக்கு புழல், பாளையங்கோட்டை சிறை கைதிகளிடம் விசாரணை: தூசி தட்டப்படும் 13 ஆண்டு பழைய வழக்கு
சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் புழல் மற்றும் பாளையங்கோட்டை சிறைக் கைதிகளிடம் விசாரணை நடந்துள்ளது. தமிழகத்தின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி, தனது வீட்டிலிருந்து நடைப்பயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். கடந்த 13 ஆண்டுகளாக போலீசார் தீவிர விசாரணை செய்தும், வழக்கில் துப்பு துலங்கவில்லை.
இந்த நிலையில் தான், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு குழு அமைக்கப்பட்டு, அப்போதைய திருச்சி சரக டிஐஜி வருண்குமார், தஞ்சாவூர் எஸ்பி ராஜாராம் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் சில தினங்களுக்கு முன்பாக, சிபிசிஐடி டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த 13ம் தேதி, டிஐஜி வருண்குமார் தலைமையிலான சிபிசிஐடி போலீசார், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனைக் கைதியான திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த குணா என்கிற மண்ணச்சநல்லூர் குணசீலன் என்பவரிடம் திடீர் விசாரணை மேற்கொண்டனர். திருச்சி பகுதியில் கடந்த 2004ம் ஆண்டு மூன்று நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கடந்த 2019ல் நீதிமன்றம் குணசீலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவர் மீது ஐந்து கொலை வழக்குகள் உள்பட 23 வழக்குகள் உள்ளன.
அதேபோல, பாளையங்கோட்டை சிறையில் தண்டனைக் கைதியாக உள்ள ரவுடி சுடலை முத்துவிடமும் டிஐஜி வருண்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைதாகி 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் சுடலை முத்து, திருச்சியில் ராமஜெயம் கொலை நடந்த சமயத்தில் தன்னோடு இருந்த மற்றொரு கைதியிடம் செல்போனில் கொலை சம்பவம் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியானது.
அதன் அடிப்படையில், தொடர்ந்து ராமஜெயம் கொலை வழக்கில் சுடலை முத்துவும் சந்தேகப் பட்டியலில் இருந்து வருகிறார். நீண்ட நாட்களாக குற்றவாளியை நெருங்க முடியாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை மீண்டும் தூசி தட்ட ஆரம்பித்துள்ளார் சிறப்பு குழுவின் விசாரணை அதிகாரியும், சிபிசிஐடி டிஐஜியுமான வருண்குமார் அதன் ஒரு கட்டமாக, புழல் சிறையிலும், பாளையங்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகளிடமும் விசாரணை நடத்தியுள்ளார்.
சுமார் 13 ஆண்டு காலமாக குற்றவாளிகள் எங்குள்ளனர், கொலைக்கான பின்னணி காரணம் என்ன என்பது தெரியாமல் இந்த வழக்கு இருட்டில் இருந்து வரும் நிலையில், தற்போது விசாரணையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, கொலைக்கான காரணம் வெளியே வருமா அல்லது இந்த விசாரணையும் 13 ஆண்டுகாலமாக கிணற்றில் போட்ட கல் போல காணாமல் போகுமா என சமூக வலைதளத்தில் பல்வேறு தரப்பினரும் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.