அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் சமூக, சாதி அடையாள பெயரை மாற்றுவதில் அவசரம் கூடாது
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த முன்னோர்கள் பலர் தமது பகுதி மக்களின் கல்வி வளர்ச்சிக்கு பல ஏக்கர் நிலங்களை கல்விக் கூடங்களுக்கு தானமாக கொடுத்தும், மக்களின் பொது செயல்பாடுகளுக்காகவும் பல கொடைகளை வழங்கி பல பகுதிகளை வளர்ச்சி அடைய செய்துள்ளனர். அவர்களை போற்றி நினைவு கூறும் வகையில் அவர்களின் பெயர் உடன் அவர்கள் பயன்படுத்தி வந்த அவர்கள் குல பெயர் உடன் முழுமையாக பெயரை கொண்டு அவர்கள் பெயர் அந்த பகுதி மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப சூட்டப்பட்டது. தற்போது சாதிய பெயர்களை நீக்குவதாக கூறி அரசு ஒட்டுமொத்தமாக பல சமூகங்களின் அடையாளத்தையே நீக்குவது சமூக ஒற்றுமைக்கும், பல ஆண்டு கால கலாச்சார நடைமுறைக்கும் எதிராக உள்ளது.
நமது முன்னோர்கள் செய்த தியாகங்களையும் சீர்குலைத்து அவர்கள் நினைவுகளை மறைக்க வழி செய்வது போல் உள்ளது.இவ்வாறு பெயர் நீக்குவதிலும் புதிய பெயர் சூட்டுவதிலும் ஆங்காங்கே முரண்பாடுகள் அந்த பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. சாதியப் பெயர்கள் கூடாது என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பல சமுதாயங்களின் அடையாளங்களை அழிக்கும் செயலாக உள்ளது. காலங்காலமாக இருக்கின்ற இந்த பெயர்களை எல்லாம் நீக்குவது தமிழக மக்கள் இடத்தில் குழப்பத்தையும், முரண்பாடுகளையுமே ஏற்படுத்தும். எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் நிதானமாக பொறுமையை கையாண்டு, அந்தந்த பகுதி மக்களின் கருத்தறிந்து முறையாக செயல்பட வேண்டும்.