என் மீது தாக்குதல் நடத்திய அன்புமணி ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும்: டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் தரப்பு பாமக எம்எல்ஏ அருள் புகார்
சென்னை: என் மீது தாக்குதல் நடத்திய அன்புமணி ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் ஆதரவு பாமக எம்எல்ஏ அருள் புகார் அளித்துள்ளார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: என்னை கொலை செய்ய வேண்டும் என்று தாக்குகிறார்கள் என்றால், முதன்மை குற்றவாளிகளான ஜெயபிரகாஷ், சடையப்பன், சங்கர் ஆகியோர்களை கைது செய்ய கூடாது என்று போலீசாரை ஒரு தரப்பினர் மிரட்டி கொண்டு இருக்கிறார்கள். ஒரு துக்க நிகழ்ச்சிக்கு செல்லும் போது என்னுடைய காரை ஒருவன் உடைக்கிறான். கவுதமன் என்பவன் என் கார் மீது கல்லை தூக்கி போடுகிறான்.
உடன் இருந்தவர்கள் தடுக்கவில்லை என்றால் என்னை கொலை செய்து இருப்பார்கள். வாழப்பாடியில் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர். இதை எதை காட்டுகிறது என்றால் காவல்துறையை மிரட்டி அவர்களை திசை திருப்பி உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பற்ற வேண்டும் என்றுதான். பாமகவில் இருக்கிற எனக்கே இந்த நிலைமை என்றால்..., அன்புமணியை நம்பி யார் சென்றாலும், அவர்களை கொலை செய்வார்கள். கொலையில் இருந்து தப்பித்துக் கொண்டால் போலீசை மிரட்டி வழக்கு போடுவார்கள். என் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்.