17ம் தேதி பாமக பொதுக்குழு: மூத்த நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை
திண்டிவனம்: வரும் 17ம் தேதி நடக்க உள்ள பாமக பொதுக்குழு கூட்டம் சம்பந்தமாக மூத்த நிர்வாகிகளுடன் ராமதாஸ் இன்று ஆலேசனை நடத்தினார். பாமகவில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே நடந்து வரும் மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. கடந்த 10ம் தேதி பூம்புகாரில் வன்னியர் சங்க மகளிர் மாநாட்டை நடத்தி முடித்த ராமதாஸ் தற்போது வரும் 17ம் ேததி புதுவை அருகே பட்டானூரில் நடக்க உள்ள பாமக பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்க மூத்த தலைவர்களை தோட்டத்துக்கு வரச்சொல்லி ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், பரந்தாமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இன்று தோட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.