ராமதாஸ்-அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்; வன்னியர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு: திண்டிவனத்தில் பரபரப்பு
திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகார மோதல் 7 மாதங்களை கடந்தும் நீடித்து வந்தது. இருவரும் போட்டி பொதுக்குழுவை நடத்தி கட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கட்சி விரோத நடவடிக்ைகயில் ஈடுபட்டதாக கூறி அன்புமணியை நேற்று பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராமதாஸ் நீக்கி உத்தரவிட்டார். அவருடன் கட்சிக்காரர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என உத்தரவிட்டார். ஆனால் அன்புமணியை நீக்கும் அதிகாரம் ராமதாசுக்கு இல்லை என வக்கீல் பாலு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ம் தேதி இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த வன்னியர் சங்க தொண்டர்கள் 21 போராளிகளுக்கு பாமக சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்படும். இந்த வருடமும் திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் அன்புமணி தரப்பில் அஞ்சலி செலுத்த அவரது தரப்பில் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையிலான நிர்வாகிகள் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் பிரகாசிடம் நேற்று மனு கொடுத்தனர்.
இதனை அறிந்த ராமதாஸ் அணியின் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாமகவினர் இன்று ஒன்று கூடி, அன்புமணி ஆதரவாளர்கள், அலுவலகத்தை கைப்பற்றி விடுவார்களோ என்று நினைத்து திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தை பூட்டினர். மேலும், ‘இடத்தின் உரிமையாளரான செந்தில் என்பவரிடம், இந்த அலுவலகம் தலைவர் ராமதாஸ் பொறுப்பில் உள்ளது. அவர்தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். தலைவர் ராமதாஸ் நேரில் நினைவஞ்சலி செலுத்திய பின்னர் தான் அவர்கள் செலுத்த வேண்டும் என்று கூறினார். ஆனால் இதற்கு அன்புமணி தரப்பு ஏற்கவில்லை. இதனால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.