நாளையுடன் கெடு முடிகிறது; அன்புமணி பதிலளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க ராமதாஸ் முடிவு
திண்டிவனம்: பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு விதித்த கெடு நாளை 10ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் இதுவரை அன்புமணி விளக்கம் அளிக்காததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளார். நாளை மறுநாள்(11ம் தேதி) நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு அவர் தனது முடிவை அறிவிப்பார் என தெரிகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகார மோதல் 7 மாதங்களாக நீடித்து வருகிறது. இருவரும் பாமக போட்டி பொதுக்குழுவை நடத்தி முடித்த நிலையில், அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தரப்பு 16 தீர்மானங்களை முன்மொழிந்தன. அதன்பிறகு விளக்கம் கேட்டு அன்புமணிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு கடிதம் அனுப்பியது. இதற்கான காலக்கெடு கடந்த மாதம் 31ம் ேததியுடன் முடிவடைந்தது. ஆனால் அன்புமணி பதிலளிக்கவில்லை.
இதை தொடர்ந்து கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட அமைப்பான மாநில நிர்வாக குழு கூட்டம் தைலாபுரத்தில் கடந்த 3ம் தேதி கூடியது. ராமதாஸ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான நிர்வாகிகள், கட்சி நிறுவன தலைவரை மீறி செயல்பட்டு வரும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். 2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கட்சியில் நீடித்து வரும் குழப்பங்களுக்கு ராமதாஸ் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவால் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கை குறித்தும், அன்புமணி மீது எந்தவிதமான நடவடிக்கை எடுப்பது என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே கொடுத்த கெடுவுக்கு அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை என்பதால் நிர்வாக குழு மேலும் ஒருவார காலம் அவகாசம் கொடுக்கலாம் என முடிவெடுத்தது. அதன்படி வரும் 10ம் ேததிக்குள் அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராமதாஸ் விதித்த கெடு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் இதுவரை அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை. எனவே நாளை (10ம் தேதி) மாலை வரை பார்த்துவிட்டு நாளை மறுநாள் (11ம் ேததி) வியாழக்கிழமை முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி அன்புமணியை செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.