ராமதாஸுக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது; இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு இல்லை :அன்புமணி
சென்னை: ராமதாஸுக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது; இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு இல்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார். இதயம் தொடர்பான பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டது.இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி மருத்துவமனைக்கு நேரில் சென்று ராமதாஸின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், அவருக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “ நேற்று மாலை மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். ராமதாஸுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, இதயத்துக்கு செல்லும் ரத்துக்குழாய்களில் அடைப்புகள் இல்லை. அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என இதய சிகிச்சை மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சாப்பிடும் மாத்திரைகளை எடுக்க வேண்டும் என சொல்லியுள்ளனர். அவர் ஐசியுவில் இருப்பதால் பார்க்க முடியவில்லை. 6 மணி நேரம் ஐசியுவில் இருப்பார் அதன்பின்னர் சாதாரண அறைக்கு மாற்றப்படுவார். மருத்துவர்களிடம் பேசி விவரங்களை கேட்டறிந்தேன்,” என்றார்.