பேரணியில் ஓரணி
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. இதில் வாக்காளர்கள் ஜனநாயக கடமையை செலுத்தி, தங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்கின்றனர். அவர்கள் மக்களின் குரலாக நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் ஒலித்து வருகின்றனர். இந்தியாவில் ஆரம்பகட்ட தேர்தல்கள் என்பது, வேட்பாளர்களுக்கான சின்னங்களில் முத்திரையிட்டு வாக்கை பதிவு செய்யும் வகையில் இருந்தது.
இப்படிப்பட்ட நிலையில், அறிவியலின் வளர்ச்சியால் 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில், முதல்முறையாக மின்னணு வாக்குப்பதிவு முறை அமலுக்கு வந்தது. அன்றிலிருந்து 20ஆண்டுகளாக, இந்த முறையில் தான் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் மின்னணு வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகளும், நடுநிலையாளர்களும் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கு 100சதவீதம் தெளிவான தீர்வு என்பது, இதுவரை கிடைக்காத ஒன்றாகவே உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி, ‘வாக்குத்திருட்டு’ என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதும், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதும் அவரது குற்றச்சாட்டில் பிரதானமாக இருந்தது. மேலும், இதற்கான ஆதாரங்களையும் அவர், மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தார்.
போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், தவறான புகைப்படங்கள், படிவம் 6ஐ தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 5வழிகளில் இந்த வாக்கு திருட்டு நடந்துள்ளது. ஒன்றியத்தை ஆளும் பாஜ அரசும், தேர்தல் ஆணையமும் கூட்டு வைத்து வாக்குத்திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்ற அவரது தெளிவான குற்றச்சாட்டு, நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையமும் இதுவரை இதற்குரிய தெளிவான விளக்கத்தை தரவில்லை என்பது ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் குமுறலாக மாறியுள்ளது. இந்த நிலையில் ‘வாக்காளர் உரிமை யாத்திரை’ என்ற பெயரில், புதிய முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளார் ராகுல்காந்தி. பீகாரின் சசாரம் என்ற இடத்தில் தொடங்கி, ஆரம்பமான இந்த பயணத்தில் மக்கள் வெள்ளமும் அலையென திரண்டு வருகிறது. இந்த எழுச்சியை மேம்படுத்தும் வகையில், பீகாரில் தொடர் பேரணி ஒன்றை நடத்துகிறார் ராகுல்காந்தி.
வரும் 27ம்தேதி நடக்கும் இந்த பேரணியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்ேகற்கிறார். இதேபோல் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த்சோரன், தெலங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டி, இமாசல பிரதேச முதல்வர் சுக்விந்தர்சுகு, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல்வேறு தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று ஏராளமானோர் திரளாக பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.
ஆனால், இதற்கு ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதையே அவர்களின் மெத்தனப்போக்கு காட்டுகிறது. ‘‘ஆளுங்கட்சி மட்டுமன்றி, எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் தேர்வு செய்து பணியாற்ற அனுப்பி வைக்கும் எஜமானர்கள் மக்கள் தான். அவர்களின் பிரதிநிதிகளாகவே இந்த பேரணியை நடத்துகின்றனர் எதிர்க்கட்சிகள். இதன்படி பேரணியில் ஓரணியாக மக்களும் உள்ளனர். எனவே, வாக்குப்பதிவு குறித்த நம்பகத்தன்மையை மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டுமன்றி, மக்கள் மன்றத்திற்கும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்’ என்கின்றனர் நடுநிலையாளர்கள்.