ராஜஸ்தானில் சிகார் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமதோபூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது!
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் சிகார் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமதோபூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது. சரக்கு ரயில் தடம்புரண்ட நிலையில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
மும்பை மற்றும் டெல்லியை இணைக்கும் சவாய் ஸ்ரீமதோபூர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பி கேபின் பகுதியில் சரக்கு ரயில் அரிசியை ஏற்றிச் சென்று பூலேராவிலிருந்து ரேவாரிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பிரதான பாதையிலிருந்து லூப் பாதைக்கு திருப்பி விடப்பட்டபோது, ஒரு பெட்டி திடீரென தடம் புரண்டதால், அதன் பின்னால் இருந்த சுமார் 38 பெட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக தடம் புரண்டன.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், ரயில்வே அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்டவாளத்தில் இருந்து பெட்டிகளை அகற்றத் தொடங்கினர். இந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து, ரிங்காஸ்-ஸ்ரீமதோபூர் ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பல ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மற்றவை மாற்று வழிகள் வழியாக திருப்பி விடப்படுகின்றன. தண்டவாளங்களில் இருந்து வேகன்களை அகற்ற சில மணிநேரம் ஆகலாம் எனவும் பின்னர் தண்டவாள பழுதுபார்க்கும் பணி தொடங்கும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.