ராஜஸ்தானில் இருந்து மத்திய பிரதேசம் வந்து துப்பாக்கி முனையில் பெண் கடத்தல்: வேறொரு ஆணுடன் வாழ்ந்ததால் ஆத்திரம்
மண்ட்சோர்: மத்திய பிரதேசத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, கர்பா நடனப் பயிற்சியில் இருந்த பெண்ணை அவரது குடும்பத்தினரே துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரின் குடிப்பழக்கம் மற்றும் கொடுமை காரணமாக அவரைப் பிரிந்து, கடந்த சில மாதங்களாக மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோரில் வேறு ஒருவருடன் வசித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், அவரைக் கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பவ்சார் தர்மசாலாவில் நடந்த கர்பா நடனப் பயிற்சியில் அந்தப் பெண் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, அந்தப் பெண்ணை அங்கிருந்து வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான காணொலி இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து ‘டயல் 112’ அவசர சேவை மூலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாகச் செயலில் இறங்கிய காவல்துறையினர், நான்கு தனிப்படைகளை அமைத்து, மாவட்டத்தின் அனைத்து முக்கிய சாலைகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தித் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இரண்டே மணி நேரத்தில், கடத்தப்பட்ட பெண்ணை மீட்டதுடன், கடத்தலில் ஈடுபட்ட அவரது குடும்பத்தினர் ஆறு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் போலித் துப்பாக்கி ஒன்றையும் அவர்கள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.