ராஜபாளையம் அருகே பரபரப்பு ஆற்றில் சிக்கிய 250 பக்தர்கள் மீட்பு
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரசித்திபெற்ற அய்யனார் கோயில் உள்ளது. இங்கு மண்டல பூஜை மற்றும் திருக்கார்த்திகை 2ம் நாளை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றில் குறைவான தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் பக்தர்கள் ஆற்றை கடந்து மறுபுறம் உள்ள கோயிலுக்கு சென்றிருந்தனர். மாலையில் திடீரென ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுமார் 200 பக்தர்கள் ஆற்றை கடக்க முடியாமல் மறுபுறம் சிக்கிக் கொண்டனர். வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருந்ததால் பக்தர்கள் அச்சத்தில் தவித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படையினர் உடனடியாக சுதாரித்து, ஆற்றில் இறங்கி பக்தர்களை பாதுகாப்பாக மீட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.