ராஜா அண்ணாமலைபுரத்தில் பெண்ணை துரத்தி கடிக்க முயன்ற பாக்ஸர் வகை நாய்: நாயின் நகம் கம்மலில் சிக்கியதால் காது கிழிந்தது
சென்னை:சென்னை ராஜா அண்ணாமலைபுரம் குட்டி கிராமணி தெருவை சேர்ந்தவர் உஷா (45). இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் இருந்து வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இவரது வீட்டின் அருகே குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாக்ஸர் வகை நாயை வளர்த்து வருகிறார். உஷா சாலையில் நடந்து சென்ற போது, திடீரென அந்த நாய் உஷா மீது பாய்ந்து, அவரது சேலையை கடித்து இழுத்து கீழே தள்ளி கடிக்க முயன்றது.
இதை பார்த்த நாயின் உரிமையாளர் குமார், ஓடிவந்து தனது நாயை கட்டுப்படுத்தினார். தக்க சமயத்தில் நாயை உரிமையாளர் கட்டுப்படுத்தியதால் உஷா உயிர் தப்பினார். அப்போது நாயின் முன்கால் நகம் உஷாவின் இடது காதில் உள்ள கம்மலில் சிக்கியதால், உஷாவின் காது கிழிந்தது. உடனே அவரை நாயின் உரிமையாளர் குமார் மீட்டு மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து உஷா, அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.