மழைக்காலம் நெருங்கிவிட்டதால் மின்சாரம் கையாள வழிமுறைகள்: மேற்பார்வை பொறியாளர் அறிக்கை
திருவள்ளூர்: மின்சாரவாரிய மேற்பார்வை பொறியாளர் அ.சேகர் அறிக்கையில் கூறியிருப்பதாவது; காற்று மற்றும் மழைக்காலங்களில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின் பகிர்வு பெட்டிகள் அருகில் செல்ல வேண்டாம். மின் கம்பிகள் அறுந்துகிடந்தால் அவற்றை தொடாமலும் அருகில் செல்லாமலும் உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். மின் பாதைக்கு அருகில் உள்ள மரக் கிளைகளை மின்சாரவாரிய ஊழியர் துணையுடன் மட்டுமே வெட்ட வேண்டும். மின் மாற்றிகள், மின் பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும்போது அருகே செல்லக்கூடாது. தண்ணீர் தேங்கிய இடங்களில் குழந்தைகளை விளையாட விடக்கூடாது.
குழந்தைகள் மின்கம்பிகளுக்கு அருகில் காற்றாடி விடக்கூடாது. டிரான்ஸ்பார்மர்கள், மின்சார பெட்டிகள், மின் இழுவை கம்பிகள் அருகில் செல்லக்கூடாது. மின் கம்பத்தின் அருகில் உள்ள இழுவை கம்பியிலோ, மின் கம்பத்திலோ, கயிறுகட்டி துணிகளை உலர்த்தக் கூடாது. மின்கம்பம் மீது கால்நடைகளை கட்டக்கூடாது. இடி, மின்னலின்போது மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மார்கள், துணை மின் நிலையங்கள் போன்ற இடங்களில் தஞ்சம் அடையக்கூடாது. நுகர்வோர்கள் தன்னிசையாக மின் மாற்றங்களில் எரியிழைணை மாற்றக்கூடாது. இடி, மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி ஆகிய மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். வீடுகளில் மின் கசிவின்றி வயரிங்கை பராமரிக்கவேண்டும்.