மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கட்டடங்களை பராமரிக்க கல்வித்துறை உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இதுவரை இயல்பை விட 59 சதவீதம் மழை பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
பள்ளிகளில் மின் இணைப்புகளை கண்காணிப்பது, வடிகால்களை சுத்தம் செய்வது, திறந்தவெளி கால்வாய்களை துார்வாரி மூடுதல், குழிகளை நிரப்புதல் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரங்கள், மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். கூரைகளில் தண்ணீர் தேங்குவதை கண்காணித்து உடனடியாக அகற்ற வேண்டும். சேதமடைந்த கட்டடங்களை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் சைக்கிள்களில் பள்ளிக்கு வரும் போது பாதுகாப்பாக வர அறிவுறுத்த வேண்டும். தொடர் மழையால் பள்ளியில் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே சுற்றுச் சுவர் உறுதித் தன்மையை கண்காணிக்க வேண்டும். மின் கசிவு ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து, உறுதிப்படுத்த வேண்டும். பருவமழை காலங்களில் மாணவர்கள் மழைக் கோட்டுகள், குடைகளை பயன்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.