வீரபாண்டியன்பட்டினத்தில் 10 நாட்களுக்கும் மேலாக குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர்
*பொதுமக்கள் கடும் அவதி
திருச்செந்தூர் : மழை நின்று இயல்பு நிலை திரும்பிய போதிலும் வீரபாண்டியன்பட்டினம் ஜூப்லி நகர் மற்றும் குறிஞ்சி நகர் கடைசி தெருவில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீர் 10 நாட்களுக்கும் மேலாக வடியாததால் அப்பகுதி மக்கள் வேதனையில் உள்ளனர்.
தென் கடலோர மாவட்டங்களில் கடந்த வாரம் வரை தொடர் கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. திருச்செந்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையெங்கும் மழை நீர் ஆறாக ஓடியும், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியும் கிடந்தது. தேங்கிய நீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
கடந்த 30ம் தேதி முதல் மழை நின்றதையடுத்து இயல்பு நிலை திரும்பியது. இதேபோல திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஜுபிலி நகர், குறிஞ்சிநகர் கடைசி தெருவில் மழை நீர் இன்னும் வடியாமல் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். தேங்கிய நீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட போதிலும் இன்னமும் சில பகுதிகளில் மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்தே உள்ளது.
தேங்கியுள்ள நீரினால் நோய் வரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பஞ்சாயத்து நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் விரைவாக நீரினை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.