எந்த அளவு மழை பெய்தாலும் எதிர்கொள்வதற்கு அரசு தயார்: துணை முதல்வர் உதயநிதி பேட்டி
சென்னை: சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலம், வியாசர்பாடி பகுதி அம்பேத்கர் கல்லூரியில் வியாசர்பாடி கால்வாயில் நடந்து வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் அதுகுறித்த புகைப்பட விளக்க காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வங்கக்கடலில் மோன்தா புயல் உருவாகியுள்ளது. நாளை புயல் கரையை கடக்கும் என்று எதிர் பார்க்கின்றோம்.
அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மொன்தா புயல் தமிழ்நாட்டில் பெரிய பாதிப்புகள் இல்லாமல், ஆந்திராவை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறது. இருந்தாலும், வடசென்னை பகுதி, திருவள்ளூர் பகுதிகளில் 5 முதல் 8 செ.மீ வரை மழை எதிர்பார்க்கலாம் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை முதல்வரின் உத்தரவிற்கிணங்க நானும் அமைச்சர், மேயர், துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், மாநகராட்சி ஆணையர் எல்லோரும் பணிகளை எல்லாம் ஆய்வு செய்ய வந்திருக்கிறோம்.
வடசென்னையை பொறுத்தவரைக்கும் இதுவரை 18 கால்வாய்கள், 13 குளங்கள் சென்னை மாநகராட்சி மூலமாக தூர்வாரப்பட்டிருக்கிறது. மொத்தம் 331 கி.மீ நீளம் கால்வாய்கள் தூர்வாரப்பட்டிருக்கிறது. 3.50 லட்சம் டன் கழிவுகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது. முதல்வர் இந்த முன்னெச்செரிக்கை ஏற்பாடுகளை எல்லாம் துரிதப்படுத்த சொல்லியிருக்கிறார். குறிப்பாக, சமூக வலைதளங்களில் பொதுமக்கள் அளிக்கின்ற புகார்களை உடனடியாக கவனிக்க சொல்லியிருக்கிறார்கள்.
அதன்பேரில் தான் இன்றைக்கு வந்து இந்த வியாசர்பாடி, அம்பேத்கர் கல்லூரி, கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் ஆகியவற்றில் எல்லாம் இன்றைக்கு ஆய்வு செய்திருக்கிறோம். அடுத்த 10 நாட்களுக்கு மிகப்பெரிய மழை இருக்காது என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. ஆனால், எந்த அளவிற்கு மழை பெய்தாலும் அதையெல்லாம் எதிர்கொள்வதற்கு முதல்வர் தலைமையிலான, நம்முடைய அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், மூர்த்தி, எபினேசர், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் பிரதீப் யாதவ், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.