காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைவதால் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்
சென்னை: சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக் கடலில் நேற்று ஆந்திரா-ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் , வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் வலுப்பெற்று அதே பகுதியில் நிலை கொண்டிருந்தது.
இது நேற்று நள்ளிரவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று முற்பகலில் இந்த தாழ்வு மண்டலம் தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை கடக்கும் என்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. தவிரவும், தெற்கு கொங்கன்- வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு - தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையும் உள்ளது.
இதன் காரணமாக நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் நேற்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த காற்று மணிக்கு 50கிமீ வேகத்தில் வீசும். இதே நிலை 24ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.