கொட்டியது மழை... கூடியது குளிர் கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் குஷி
கொடைக்கானல் : கொடைக்கானலில் மழை காரணமாக குளிர் மேலும் அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குஷியடைந்தனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் உலக பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
இங்கு தற்போது ஆப் சீசன் எனப்படும் இரண்டாம் சீசன் நிலவி வருகிறது. கோடை, குளிர் சீசன்கள் இடையே உள்ள இந்த சீசன் காலத்தில் எப்போதுமே இதமான தட்பவெப்ப நிலை நிலவும். அதன்படி இந்த ஆண்டும் இரண்டாம் சீசன் களைகட்டி வருவதால் இதனை அனுபவிக்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். கடந்த 2 நாட்களாக வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரித்தது.
நேற்று மோயர் பாயிண்ட், குணா குகை, தூண் பாறை, பைன் பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து இயற்கை பசுமை கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர். நட்சத்திர ஏரியில் செயற்கை நீரூற்றை கண்டு ரசித்தபடி படகு சவாரி செய்தும், ஏரி சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் செய்தும் மகிழ்ந்தனர்.
மேலும் பிரையண்ட் பூங்காவில் வண்ண பூக்களை கண்டு ரசித்து செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். கொடைக்கானலில் நேற்று பிற்பகல் சுமார் அரை மணிநேரம் மழை பெய்ததால் மேலும் குளிர் அதிகரித்தது. இந்த கிளைமேட்டை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக அனுபவித்தனர். மேலும் வெயிலுடன் கூடிய மழை காரணமாக வானில் தோன்றிய வானவில்லை கண்டு பரவசமடைந்தனர்.