மழை, வௌ்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி பஞ்சாப்புக்கு ரூ.1,600 கோடி நிதி: பிரதமர் மோடி அறிவிப்பு
சண்டிகர்: கனமழை வௌ்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்துக்கு ரூ.1,600 கோடி, இமாச்சலபிரதேசத்துக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்பட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக மேக வெடிப்பு காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்கள் வௌ்ளத்தில் தத்தளிக்கின்றன. மேலும், இமாச்சலபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் நிலச்சரிவு மற்றும் வௌ்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்து விட்டனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று கனமழை, வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சலபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களை ஆய்வு செய்தார். துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த உடனேயே, முதலில் இமாச்சலபிரதேசத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மழை, வௌ்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் பறந்தபடி பார்வையிட்டார். அப்போது மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லா, பாஜ தலைவர்களுடன் காங்க்ரா பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து மழை, வௌ்ள பாதிப்புகள், மதிப்பீடுகள் பற்றி அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கனமழை பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலபிரதேசத்துக்கு ரூ.1,500 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என தெரிவித்தார். அத்துடன், மாநில பேரிடர் நிவாரண நிதியின் இரண்டாம் தவணை மற்றும் பிரதமரின் விவசாயி கவுரவிப்பு நிதி ஆகியவை முன்கூட்டியே விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இமாச்சலபிரதேச பயணத்தை முடித்து கொண்டு பஞ்சாப் மாநிலத்துக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்தவாறு ஆய்வு செய்தார். பின்னர் குருதாஸ்பூரில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறி, கலந்துரையாடினார். இதையடுத்து கனமழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மாநிலத்துக்கு ரூ.1,600 கோடி நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.