மழை காலத்தில் நோய், வெள்ளம், இடி மின்னல் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தமிழக அரசு தெரிவித்துள்ள அறிவுரைகள்
சென்னை: மழை காலத்தில் நோய் பாதிப்பு, வெள்ள பாதிப்பு, இடி மின்னல் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தமிழக அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழை காலத்தில் நோய் பாதிப்புகள், வெள்ள பாதிப்புகள், இடி மின்னல் தாக்கம் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தமிழக அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. மழைக்காலத்தில் எதையெல்லாம் செய்ய வேண்டும். எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிவித்துள்ளது. அது வருமாறு:
* மழை காலத்தில் குடிநீரில் கிருமி தொற்று ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படக்கூடும். அதனால் காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பருக வேண்டும். சூடான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
* தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்.
* வீட்டில் மின்விளக்குகளை கவனமுடன் கையாள வேண்டும்.
* உடைந்த மின் சாதன பொருட்களை உடனே மாற்றவும்.
* வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* சூப், ரசம், பால், டீ, காபி போன்ற சூடான திரவ உணவுகளை அருந்தலாம்.
* அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* மின்மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் அருகே செல்ல வேண்டாம்.
* மின்சார கம்பிகள் அறுந்து விழுந்து இருந்தால் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.
* இடி, மின்னல் ஏற்படும்போது ஏசி, டிவி, கம்ப்யூட்டர், செல்போன், மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம்.
* வீட்டுச் சுவரில் தண்ணீர் கசிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* பச்சை மரங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம்.
* குளிர்ச்சியான பொருட்களை மழை காலத்தில் உண்பதை தவிர்க்க வேண்டும். பழச்சாறுகளை தவிர்ப்பது நல்லது.
* கதவுகள், ஜன்னல்களை மூடி வைக்கவும், பழுதடைந்த வீடாக இருந்தால் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள்.
* கொதிக்க வைத்த குளோரின் கலந்த குடிநீரை பருக வேண்டும்.
* அரசு சார்பில் தெரிவிக்கப்படும் அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டும் நம்பவும்.
* சேதமடைந்த கட்டிடத்தின் அருகில் செல்ல வேண்டாம்.
* உடைந்த மின் கம்பங்கள், அறுந்து விழுந்த மின் கம்பிகள் அருகில் செல்லக்கூடாது.
* புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழலில் லேப்டாப் செல்போன் ஆகியவற்றினை முழுமையாக சார்ஜிங் செய்து கொள்ள வேண்டும்.
* யுபிஎஸ் பேட்டரியை சரி பார்க்க வேண்டும்.
* ஜெனரேட்டரில் உள்ள டீசலை சரிபார்த்து முழு அளவில் வைக்க வேண்டும்.
* குடிநீர் தொட்டியில் தண்ணீர் முழு அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* போதுமான அளவு குடிநீர் மற்றும் உணவு தின்பண்டங்கள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
* எமர்ஜென்சி லைட், மெழுகுவர்த்தி போன்றவற்றை தயார்படுத்தி வைத்திருக்கலாம்.
* மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது.