மழையில் சேதமடைந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: மழையில் சேதமடைந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டிட்வா புயல் காரணமாக பெய்த மழையில் சிக்கி காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்திருப்பதாகவும், அவற்றுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன். அதை தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் 2.11 லட்சம் ஏக்கர் பயிர்கள் மட்டுமே மழை நீரில் மூழ்கியிருப்பதாகவும், அவற்றில் பாதிப்பின் அளவு கணக்கிடப்பட்டு ஏக்கருக்கு ரூ.8,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
சம்பா, தாளடி பயிர்களுக்கான விதை நெல் வாங்கி, நாற்று வளர்த்து, அதை பிடுங்கி நடவு செய்வதற்கே ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகும் நிலையில், அதை விட குறைவான இழப்பீடு வழங்குவது அநீதியானது. காவிரி பாசன மாவட்டங்களில் ஒரு ஏக்கர் சம்பா, தாளடி பயிர்களுக்கான சாகுபடி செலவு ரூ.40 ஆயிரம் ஆகும். இதுவரை ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகியிருக்கிறது. இன்னும் 30 முதல் 40 நாட்களில் இந்த பயிர்கள் அறுவடை செய்யப்பட்டால் ஏக்கருக்கு ரூ.65 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அரசு நிர்ணயிக்க வேண்டும்.