தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தில் 3வது நாளாக கொட்டும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: கடலூர், மரக்காணத்தில் வீடுகள் இடிந்து 3 பேர் பலி

⦁ ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

Advertisement

1) வைகை, தாமிரபரணியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

2) வேகமாக நிரம்பும் அணைகள்

3) கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

4) ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மூடல்

சென்னை: தமிழகத்தில் 3வது நாளாக கொட்டும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் வீடுகள் இடிந்து 3 பேர் பலியாகி உள்ளனர். விழுப்புரத்தில் 2000 வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. வைகை, தாமிரபரணியில் கரைபுரண்டோடும் வெள்ளத்தாலும், அணைகளும் வேகமாக நிரம்பி வருவதாலும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் பல இடங்களில் மன்சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நேற்று முன்தினம் அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலூரில் 17.4 செ.மீ மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்த மழையால் விழுப்புரம் அருகே உள்ள ஆசிரியர் நகர், சாலாமேடு, விஜிபிநகர், காணை உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 2 ஆயிரம் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துகொண்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து, கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அசோதை (69), இவரது மகள் ஜெயா (40) மற்றும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலத்தூர் கிராமம் செட்டியார் தெரு பகுதியில் வசித்து வந்த பச்சையம்மாள் (65) ஆகியோர் உயிரிழந்தனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஜவ்வாதுமலைத்தொடர் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் பேயாற்றிலும், உத்திரகாவேரி ஆற்றிலு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தென்பெண்ணை வழியாக உபரி நீர் தொடர்ந்து திறக்கப்படுவதால், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடி உபரிநீர் தென்பெண்ணை ஆற்றின் வழியே வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோவை குற்றாலம் மூடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி - மேட்டுப்பாளையம், காட்டேரி - ஊட்டி, கேத்தி பாலாடா- கெந்தளா சாலையில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தது.

மரங்களும் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி ஊட்டி அருகேயுள்ள பைன் பாரஸ்ட், 8வது மைல், ட்ரீ பார்க், தொட்டபெட்டா, அவலாஞ்சி, கேரன்ஹில், லேம்ஸ்ராக் ஆகிய சுற்றுலா தலங்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. தாமிரபரணி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றங்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குற்றலாத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக 7வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தொடர் மழையால் வைகையாற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில் மதுரை வைகையாற்று பகுதியில் நேற்று 2வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரை தொட்டு வெள்ள நீர் கரை புரண்டு ஓடியது. ஆற்றுக்கரையோரங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதில் பல இடங்களில் வீடுகள் இடிந்தன. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

⦁ புதுச்சேரியில் 25 செ.மீ. மழை

புதுச்சேரியில் கடந்த 20ம் தேதி தீபாவளியன்று காலை மிதமான மழை பெய்தது. அன்றிரவு முதல் கனமழை கொட்டியது. இந்த மழை விடிய விடிய நீடித்தது. நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை புதுவை நகர பகுதியில் 21 செ.மீ மழையும், பெரிய காலாப்பட்டில் 25 செ.மீ. பாகூர் 19 செ.மீ. திருக்கனூர், பத்துக்கண்ணு ஆகிய பகுதிகளில் 15 செ.மீ மழையும் பெய்துள்ளது. இதனால் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியது. இதனால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

⦁ காவிரி, கொள்ளிடத்தில் 39,000 கனஅடி தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 24,300 கனஅடியும், கொள்ளிடத்தில் 14,200 கன அடியும், கால்வாயில் 500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

⦁ ஆற்றில் கார் கவிழ்ந்தது 11 பேர் உயிர் தப்பினர்

தென்காசியில் இருந்து நேற்று அதிகாலை 11 பேர் கொண்ட குழுவினர் திருவனந்தபுரம் அருகேயுள்ள வர்கலாவிற்கு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அதிகாலை 5 மணிக்கு ஆரியங்காவு எடப்பாளையம் பகுதியில் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென நாய் ஒன்று சாலையில் குறுக்கே சென்றது.

அதன்மீது மோதாமல் இருக்க காரை திருப்ப முயன்றபோது, ​​சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி, சுமார் 50 அடி கீழேயுள்ள கழுதுருட்டி ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆற்றில் அதிக நீரோட்டம் இல்லாததால் கார் முழுமையாக நீரில் மூழ்கவில்லை. இதில் வாலிபர்கள் அனைவரும் தலை மற்றும் கை, கால்களில் சிறு, சிறு காயங்களுடன் தப்பினர்.

⦁ ஏற்காட்டிற்கு வர மக்களுக்கு தடை

ஏற்காட்டில் மிக அதிகப்பட்ச அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. இதனால், ஏற்காடு மலைப்பாதைகளில் ஆங்காங்கே திடீர் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வரும் நாட்களில் இன்னும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் பிரதான மலை சாலையில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகன போக்குவரத்திற்கும், சேலத்தில் இருந்து குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் சாலையில் நான்கு சக்கர வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகன போக்குவரத்திற்கும் 22ம் தேதி (நேற்று) 7 மணி முதல் நாளை (24ம் தேதி) வரை தற்காலிகமாக தடை செய்யப்படுகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

⦁ வெள்ளத்தில் மூழ்கியது உப்பளம்

மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் மரக்காணம் பகுதியில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவு உள்ள உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் உப்பு உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலை நம்பியுள்ள சுமார் 2 ஆயிரம் உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

⦁ 1 லட்சம் மீனவர்கள் முடக்கம்

தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக 21,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது படகுகள் கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடலூர் மாவட்டத்தில் 4,500 மீனவர்களும், குமரியில் 4,000 மீனவர்களும், ராமேஸ்வரத்தில் 3,000 மீனவர்கள், தூத்துக்குடி மற்றும் நெல்லை 65,000 மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள் கடலுக்கு செல்லாமல் முடங்கினர். இதேபோல், புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மொத்தம் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர்.

⦁ 1.50 லட்சம் ஏக்கர் குறுவை, சம்பா பயிர்கள் மூழ்கியது

டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்களும், தற்போது நடவு செய்யப்பட்டுள்ள இளம் சம்பா பயிர்களும் மழைநீரில் மூழ்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் நல்லவன்னியன் குடிகாடு, ஒரத்தநாடு, சாலியமங்கலம், அம்மாபேட்டை, பூண்டி, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாரான 5,000 ஏக்கர் குறுவை மழையால் சாய்ந்து நீரில் மூழ்கியது. திருவாரூர் மாவட்டத்தில் 10,000 ஏக்கர் குறுவை , மன்னார்குடி, வடுவூர், முத்துப்பேட்டை, கொரடாச்சேரி, திருவாரூர், காட்டூர் பகுதிகளில் 20,000 ஏக்கர் இளம் சம்பா பயிர்கள், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் 500 ஏக்கர் குறுவை , கொள்ளிடம், குத்தாலம் பகுதிகளில் 10,000 ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலையாமழை, கீராந்தி, சின்னதும்பூர், பெரிய தும்பூர், சோழவித்தியாபுரம், கிராமத்துமேடு, கருங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் 1,000 ஏக்கர் குறுவை , கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் போன்ற பகுதிகளில் 1 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் என மொத்தம் 1 லட்சத்து 46 ஆயிரத்து 500 ஏக்கரில் குறுவை, சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியும், சூழ்ந்தும் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 500 ஏக்கர் நெற்பயிர்கள், சின்னமனூரில் 200 ஏக்கர் நெல் பயிர்கள், மழைநீரில் மூழ்கி சேதமானது. தென்காசி மாவட்டம், கடையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 300 ஏக்கர் நெற்பயிர்கள், விருத்தாச்சலத்தில் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதேபோல், சேலம், வேலூர், நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

Advertisement

Related News