மழை பாதிப்புகளை ஆய்வுசெய்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு..!
தஞ்சை: தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்தித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது; விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்யவில்லை. நெல் கொள்முதல் செய்யப்படாததால் சாலைகளில் நெல்லை விவசாயிகள் கொட்டி வைத்துள்ளனர். சாலையில் கொட்டி வைத்துள்ள நெல்மணிகள் முளைத்ததால் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். தஞ்சை காட்டூரில் 4,000 நெல் மூட்டைகளை விவசாயிகள் சாலையோரம் குவித்து வைத்துள்ளனர்.
விவசாயிகளின் நெல் மூட்டைகளை அரசு இதுவரை கொள்முதல் செய்யவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் 8,000 மூட்டைகள் குடோனுக்கு எடுத்துச்செல்லவில்லை. நெல் கொள்முதல் செய்யாததால் சாலையில் 7,000 நெல் மூட்டைகளை விவசாயிகள் குவித்து வைத்துள்ளனர். கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் மூட்டைகளை குடோனுக்கு அனுப்பிய பிறகே விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய முடியும்.
போர்க்கால அடிப்படையில் அரசு நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தினேன். உற்பத்தி அதிகம் என்றால் அதற்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும். கொள்முதல் செய்யப்படாததால் நெல்லை சாலைகளில் கொட்டிவைத்து 20 நாளாக காவல் காக்கும் நிலை உள்ளது. நகைகளை அடகுவைத்து விவசாயம் செய்தும், மழையில் நெல்மணிகள் நனைந்துவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.