மழையின் காரணமாக வீடுகளுக்குள் புகுந்த 1,127 பாம்புகள் மீட்பு: வீட்டுக்குள் வந்தால் தானாக பிடிக்க கூடாது என அறிவுறுத்தல்
சென்னை: டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் தீயணைப்புத் துறையினர் இரவு பகல் பாராமல் உழைத்து மக்களுக்கும் விலங்குகளுக்கும் சேவை செய்து வருகின்றனர். கடந்த நவம்பர் 29ம் தேதி முதல் இன்று வரை மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அவசர அழைப்புகளின் அடிப்படையில், தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடங்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மழை மற்றும் வெள்ள நீரில் சிக்கி தவித்த 18 பேர் படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் சிக்கியிருந்த மக்கள் ஆவர்.
அதே போல் புயல் காலத்தில் வீடுகளுக்குள்ளும், பொது இடங்களிலும் பாம்புகள் நுழைந்து மக்களை பயமுறுத்தின. இதையடுத்து மக்கள் தீயணைப்புத் துறைக்கு அழைப்பு விடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் மிகுந்த திறமையுடன் மொத்தம் 1,127 பாம்புகளை பாதுகாப்பாக பிடித்தனர். இந்த பாம்புகள் எல்லாம் பத்திரமாக அருகிலுள்ள வனப்பகுதிகளில் விடுவிக்கப்பட்டன. இது மனிதர்களுக்கும் பாம்புகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்தது. மேலும் கடும் காற்றில் வேரோடு சாய்ந்த மரங்களும், உடைந்து விழுந்த பெரிய கிளைகளும் பல இடங்களில் போக்குவரத்தை முடக்கின.
தீயணைப்பு வீரர்கள் சங்கிலி ரம்பங்கள் மற்றும் பிற கருவிகளை கொண்டு 88 மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். வெள்ள நீரில் சிக்கி தவித்த 8 கால்நடைகள் மீட்கப்பட்டன. இவை மாடுகள், எருமைகள் உள்ளிட்டவை. இவற்றை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. சில பகுதிகளில் மழை நீர் தேங்கி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. 2 முக்கிய இடங்களில் தீயணைப்புத் துறையினர் சிறப்பு பம்புகள் மூலம் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
மக்கள் எந்த நேரத்திலும் அவசர உதவிக்கு அழைக்கலாம். அழைப்பு வந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக புறப்பட்டு, சம்பவ இடத்தை அடைந்து தேவையான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். புயல் காலத்தில் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருந்தால் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். வெள்ள நீரில் நடந்து செல்லக் கூடாது. வீட்டுக்குள் பாம்பு நுழைந்தால் தானாக பிடிக்க முயற்சிக்காமல் தீயணைப்புத் துறையை தொடர்பு கொள்ள வேண்டும். அவசர உதவிக்கு தீயணைப்புத் துறையின் அவசர எண் 101 என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். என தீயணைப்புத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.